Thursday, December 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17 போலீசார் மீது நடவடிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – 17 போலீசார் மீது நடவடிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பில் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தெரிவித்துள்ளது.

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், 3 இன்ஸ்பெக்டர்கள், 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 1 தலைமைக் காவலர், 7 காவலர்கள் ஆகிய 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார்.

எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.

போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர். எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளனர்.

தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது. போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே காவலரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது.

இவ்வாறாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments