புதுடெல்லி
டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், பி.ஆர்.எஸ் கட்சி மூத்த தலைவருமான கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சஞ்சய் சிங் மட்டும் தற்போது ஜாமீனில் வௌியே உள்ளார். புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும், இடைக்கால ஜாமீன் கோரியும் முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது.
மேற்கண்ட விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறை கைதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 10ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியே அரவிந்த் கெஜ்ரிவால் தான். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது. அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை வாதங்களாக தொடர்கிறோம் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் வாதங்களை அடுத்த வாரம் முன்வைத்து முடித்து விடுங்கள். இருப்பினும் தற்போது நாங்கள் ஒரு இடைக்காலமாக உத்தரவை பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், ‘‘டெல்லி மதுபான கொள்கை வழக்கு விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலமாக ஜூன் 1ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் அரசு விவகாரத்தில் தலையிடவோ அல்லது முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி அரசின் கோப்புகளில் கையெழுத்திடும் பணிகளில் ஈடுபடக் கூடாது. இதைத்தொடர்ந்து தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் ஜூன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் திகார் சிறையில் சரணடைய வேண்டும். மேலும் இந்த உத்தரவை காரணம் காட்டி, இதே வழக்கில் இருப்பவர்கள் யாரும் நிவாரணம் கேட்க கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.