நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் இருபுறமும், வாகை பூ நடுவிலும் உள்ளவாறு கட்சியின் கொடி உள்ளது.
இந்நிலையில், கட்சி கொடி பற்றி பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தவாறு உள்ளன.
அந்தவகையில், தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை தமிழக வெற்றி கழக கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைக்கு தவறானது என்று சர்ச்சை உருவானது.
இந்நிலையில், விஜயின் கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “பகுஜன் சமாஜ் கட்சியானது யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறது.
நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம் ஆகும். இதில், யானை சின்னத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்து போட்டியிட்டார். இதனால் யானை சின்னத்திற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமாக வரலாற்று உறவு உள்ளது.
தற்போது, நடிகர் விஜய் அறிமுகம் செய்த தமிழக வெற்றி கழக கட்சி கொடியில் யானை சின்னம் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.