சென்னை
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 26 குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார் விஜய். இதன் தலைவராக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், ஒருங்கிணைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பரணி பாலாஜியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட விஜய், மாநாட்டை எவ்வித சிக்கலிமின்றி எப்படியாவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி விட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திருச்சி, சேலம், மதுரை என பல மாவட்டங்களில் இடம் பார்த்து சரியான இடம் அமையாத நிலையில் இறுதியாக விழுப்புரம் பகுதியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு பந்தல்கால் ஊன்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் செய்து வருகிறார். மேலும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவு மாநாடு நடக்க வேண்டும் என்பதற்காக துபாயைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று மாநாட்டுக்கான பணிகளை கவனிக்க இருக்கிறது.
விருந்தினர்கள் வரவேற்பு தொடங்கி பல்வேறு ஏற்பாடுகளை அந்த நிறுவனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநாட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மாநாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை கவனிப்பதற்காக ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் செயல் வடிவ குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு தலைவராக ஆனந்தும், ஒருங்கிணைப்பாளராக கள்ளக்குறிச்சியை சேர்ந்த பரணி பாலாஜியும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த வகையில் முழு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு, பொருளாதார குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு, வாகன நிறுத்த குழு, உள்ளரங்க மேலாண்மை குழு, மேடை ஒழுங்கு அமைவு குழு, இருக்கை மேலாண்மை குழு, தீர்மானக் குழு, உபசரிப்பு குழு, திடல் பந்தல் அமைப்பு உதவி குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு, மகளிர் பாதுகாப்பு குழு, அவசர கால உதவி குழு, கொடிக் கம்பம் அமைப்பு குழு, வழிகாட்டும் குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு குழு, ஊடக ஒருங்கிணைப்பு குழு, சமூக ஊடக குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சி குழு, விளம்பர குழு, துப்புரவு குழு ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கின்றன.