சென்னை
ரயில்களில் ஏசி கோச்களில் பயணம் செய்யும் போது போர்வைகள் வழங்கப்படுகின்றன. இந்த போர்வைகள் குறித்து அடிக்கடி புகார்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன.
சர்வதேச அளவில் இந்தியன் ரயில்வே மிகவும் பழமையானதாகும். ஒவ்வொரு நாளும் சுமார் 23 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரயில்வே கொண்டு சேர்க்கிறது. இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால், ரயில் துறை மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.
நேரம் கடைபிடிப்பதில்லை, போதிய ரயில்கள் இல்லை, கூடுதலான முன்பதிவில்லா பெட்டிகள் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது ஒருபுறம் எனில், மறுபுறம் ரயில்களில் வழங்கப்படும் சேவை சரியாக இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகள் சுத்தமாக இருப்பதில்லை என பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. இதற்கு ரயில்வே அமைச்சகத்தின், ஹவுஸ் கீப்பிங் மேலாண்மை (என்எச்எம்) பிரிவு அதிகாரி ரிஷு குப்தா பதிலளித்துள்ளார். அதில், கீழே விரிக்க கொடுக்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் துவைக்க அனுப்பி வைக்கப்படுவதாகவும், கம்பளிகள் மாதத்திற்கு ஒருமுறை துவைக்க அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.