Sunday, December 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாநாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் - திருச்சி எஸ்.பி வருண்குமார்

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் – திருச்சி எஸ்.பி வருண்குமார்

சண்டிகர்

தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில், திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகரில் நேற்று (டிச.04) நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தனர். இதில், பல்வேறு குழுக்களாக நாடு முழுவதிலும் இருந்து நூற்றக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இளம் மாவட்ட எஸ்.பி.க்களாக உள்ள திறம்பட செயல்படும் காவல்துறை அதிகாரிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டின் இளம் எஸ்.பியாக திருச்சியில் பணியாற்றும் வருண்குமார் ஐபிஎஸ்-ஐ மாநாட்டில் பங்கேற்கும் படியும், நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று, சைபர் கிரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கும்படி வருண்குமாருக்கு மத்திய உள்துறை அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி எஸ்பி வருண்குமார், இணையதள குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது என்பது குறித்து விரிவான விளக்கத்தை அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் ஆதாரங்களோடு விளக்கி பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், இதுபோன்ற சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள நானும், என் குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளோம். அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சியினருக்கு உலகம் முழுவதும் தொடர்புகள் உண்டு. இவர்கள் தடை செய்யப்பட்ட எல்டிடிஇ அமைப்பை ஒன்றி தொடங்கப்பட்ட கட்சி. நாம் தமிழர் கட்சியினர் தன்னை மற்றும் தனது மனைவி, குழந்தைகளின் உருமாற்றம் செய்யப்பட்ட மார்ஃபிங் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து நாங்கள் அளித்த புகாரில் காவல்துறை 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது. புகார் அளித்து 3 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் எக்ஸ் தளத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இணைய குற்றம் செய்பவர்களைக் கண்காணிக்க 14சி அமைப்பை உருவாக்க வேண்டும். “தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்,” என்றார்.

இந்தியா முழுவதிலிருந்தும் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில், நாம் தமிழர் கட்சி குறித்து திருச்சி எஸ்.பி. வருண்குமார் பகிரங்கமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments