புதுடெல்லி
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும் விமானம் விபத்திற்குள்ளான சமயத்தில் விடுதி கட்டிடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விபத்திற்குள்ளான விமானம் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது என ஏர் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ. கேம்பெல் வில்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
இந்த கடினமான நேரத்தில் விபத்திற்குள்ளான AI 171 விமானம் பற்றிய சில முக்கியமான உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். விமானம் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் கடைசி பெரிய சோதனை ஜூன் 2023-ல் நடத்தப்பட்டது. அடுத்த சோதனையை வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் வலது இன்ஜின் கடந்த மார்ச் மாதம் மாற்றியமைக்கப்பட்டது. இடது இன்ஜின் கடந்த ஏப்ரல் மாதம் பரிசோதிக்கப்பட்டது.
விமானம் மற்றும் இன்ஜின்கள் இரண்டும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. விமானம் பறப்பதற்கு முன்பு எந்த பிரச்சினையும் அதில் இல்லை. இதுவரை எங்களுக்கு தெரிந்த உண்மைகள் இவை. இது குறித்து மேலும் புரிந்துகொள்ள ஒட்டுமொத்த விமான போக்குவரத்து துறையுடன் சேர்ந்து, அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கைக்காக நாங்களும் நாங்களும் காத்திருக்கிறோம்.
கடந்த ஜூன் 14-ந்தேதி டி.ஜி.சி.ஏ. வெளியிட்ட உத்தரவின்படி, எங்கள் 33 போயிங் 787 விமானங்களிலும் முழுமையான பாதுகாப்பு ஆய்வுகளை நாங்கள் நடத்தி வருகிறோம். இதுவரை, 26 விமானங்களில் ஆய்வுகள் முடிக்கப்பட்டு, சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விமானங்கள் தற்போது பராமரிப்பில் உள்ளன. மேலும் அவற்றில் கூடுதல் சோதனைகள் செய்யப்படும். இந்த மதிப்பாய்வைத் தொடர்ந்து, எங்கள் போயிங் 787 விமானங்கள் மற்றும் பராமரிப்பு செயல்முறைகள் பாதுகாப்புத் தரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன என்பதை டி.ஜி.சி.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.