கச்சத்தீவு எங்களுடையது அதை விட்டு தர முடியாது என வரலாறு தெரியாத நடிகருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், கச்சத்தீவை மீட்க போராடும் மோடி அரசுக்கும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் சீனாவிடம் பறிபோகும் நிலங்களை பற்றி கேட்க துப்பிருக்கிறதா என்று இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பு தலைவர் என்.வி சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய விஜய், பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். குறிப்பாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். மீனவர் பிரச்சினைக்கு தீர்வாக, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சை இலங்கை அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், தென்னிந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் இப்படியாக கருத்து வெளிப்படுகிறது. இதனை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசு பொறுப்பில் இருந்து யாராவது பேசியிருந்தால் அதன் மீது கவனம் செலுத்தலாம். இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியது இல்லை. கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்” என்று பேசியிருந்தார். இந்த நிலையில், வரலாறு தெரியாத ஓர் நடிகருக்கு, கச்சத்தீவு எங்களுடையது, இதை விட்டுத் தர முடியாது” என்று நமது அமைச்சர் பதில் கூற தேவையில்லை என்றும், சீனாவிடம் பறிபோகும் நமது நிலத்தை மீட்பதற்கு மத்திய அரசுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் துப்பிருகிறதா என்று இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பு தலைவர் என்.வி சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:
கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த மாநாட்டின் போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்று கூறியுள்ளார். அந்த கட்சிக்கு அவர் கத்துக்குட்டி அரசியல்வாதி. இந்த விஷயமானது கவலையாக தெரிந்தாலும், வாக்கு வங்கிக்காக தான் அவர்கள் இப்படி பேசுகிறார்கள். தமிழக மீனவ மக்களை ஏமாற்றி அவர்கள் வாக்கை கவர்வதற்காகவே இப்படி பேசுகின்றனர். இலங்கை – இந்தியா இடையே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் என்னென்ன என்பது தெரியாமலேயே, அது தொடர்பான கருத்துக்களை அறியாமலேயே விஜய் இப்படி, மீனவ மக்களின் ஓட்டுக்களை பெற பேசியிருக்கிறார். பழம் பெரும் அரசியல் தலைவர்களுக்கு கூட தெரியும், கட்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க முடியாது என்று. எனவே கச்சத்தீவு விஷயத்தை அரசியல் ஆக்கி தமிழக மீன்வர்களின் வாக்குகளை பெறுவதே அவர்களது நோக்கம். இதை தவிர வேறு எந்த நோக்கமும் இருந்தது போல் தெரியவில்லை. விஜய் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது ஒரு புறம் இந்தியாவின் ஒரு பக்கத்தை தான்தோன்றித்தனமாக சீனா கைப்பற்றிக்கொண்டு இருக்கின்றது. அதில் ஒரு இஞ்சி அளவு நிலத்தினை கூட பறிப்பதற்கு துப்பில்லாத மோடியின் மத்திய அரசும், தமிழக வெற்றிக் கழகமும் இலங்கையில் உள்ள கச்சத்தீவு தமக்கு சொந்தம் எனவும், கட்சத்தீவை திரும்பப் பெறுவோம் என்று சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது. வரலாற்றை விஜய் படித்து இருக்க வேண்டும். விஜய்க்கு நான் ஒரு புத்திமதி கூறுகின்றேன். கச்சத்தீவில் இருந்து ராமேஸ்வரம் ஏறத்தாழ 30 மைல் தொலைவில் உள்ளது. நெடுந்தீவில் இருந்து தொண்டி 30 மைல் தொலைவில் உள்ளது. கச்சத்தீவில் இருந்து கோதண்ட ரமர் கோவில் 30 மைல் தொலைவில் உள்ளது. ஆனால் தலைமன்னாரில் இருந்து 18 மைல் தொலைவிலே தனுஷ்கோடி இருக்கின்றது. அப்படி இருக்கும் போது, தனுஷ்கோடியை நாங்கள் ஏன் எங்கள் நாட்டினுடைய பகுதி என சொல்லவில்லை?
சட்டவிரோத இழுவைமடி தொழிலே தமிழக மீனவர்களுக்கும் எங்களுக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் அதற்கு கச்சதீவு பரிகாரமாக முடியாது. இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை முழுவதுமாக, நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்கு சட்டவிரோத இழுவைமடி தொழிலை நீக்க வேண்டும். முடிந்தால் விஜய் இதனை செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசுடன் பேசி, அவர்கள் மூலமாக எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரலாம்.
அப்போது கூட எங்கள் நாட்டின் ஒரு பகுதியான கச்சத்தீவை தருமாறு கேட்கலாமே தவிர மீட்க முடியாது. அரசியலுக்காக விஜய் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்க விஷயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.