கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனை மட்டுமல்லாது, ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகதகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என கூறியுள்ளார்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும், மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன் என கூறி உள்ளார்.
இந்தச் சூழலில், இந்த சம்பவம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இது குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், இன்று இரவே முதலமைச்சர் கரூர் செல்வதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். உயிரிழந்த சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.