புதுடெல்லி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய எஸ்.ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு ஆப்கனின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது. இதை மேம்படுத்த, காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப அலுவலகத்தை தூதரக அந்தஸ்துக்கு இந்தியா உயர்த்த உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வளர்ச்சி மற்றும் வளத்தைப் பெருக்குவதற்கான முயற்சிகள் இரு நாடுகளுக்கும் பொதுவானவை. எனினும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலால் இவை ஆபத்தில் உள்ளன. எனவே, இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இரு நாடுகளும் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கனிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த உங்கள் உணர்திறனை நாங்கள் பாராட்டுகிறோம். ஏப்ரல் 2025ல் ஆப்கனிஸ்தான் நாட்டினருக்கு புதிய விசா தொகுதியை இந்தியா அறிமுகப்படுத்தியது. அதன்படி, மருத்துவம், வணிகம், மாணவர் விசாக்களை இந்தியா அதிகமாக வழங்கி வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து ஆப்கன் அகதிகளை அந்நாடு திருப்பி அனுப்புவது கவலை அளிக்கிறது. அவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டவும், அவர்களின் வாழ்க்கையை மீண்டும் மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்து உதவும். ஆப்கனிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடு. அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் இந்தியா ஆழமான ஆர்வத்தைக் கொண்டுள்ளது.
ஆப்கனிஸ்தானின் சுகாதாரத்துறைக்காக ஆறு புதிய திட்டங்களை செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். கிழக்கு ஆப்கனில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இந்தியா தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கும். அங்கு குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வதில் நாங்கள் உதவ விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
2021-க்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் காபூலில் தூதரகமும், மசார் இ ஷெரீப், கந்தஹார், ஜலாலாபாத், ஹெராத் ஆகிய நகரங்களில் துணை தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது. தற்போது காபூல் தூதரகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளது. எனினும், எப்போது அது செயல்பாட்டுக்கு வரும் என்பதை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தவில்லை.