டெல்லி
ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். மாலை 6.30 மணிக்கு டெல்லி வந்தடைந்த புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். புதின் வருகையை ஒட்டி டெல்லியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதின் பயணம் செய்வதற்காக பிரத்யேக கார் மாஸ்கோவில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.
உலகின் அதிக பாதுகாப்பு கொண்ட் தலைவர்களில் ஒருவர் புதின். அவரது இந்திய வருகையை ஒட்டி டெல்லியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதின் வருகையை முன்னிட்டு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளும் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் அவருக்கான பிரத்யேக பீஸ்ட் காரில்தான் பயணம் செய்வார். அதேபோல புதின் செல்லும் இடத்திற்கும் அவரது தனிப்பட்ட பிரத்யேக கார் முன்கூட்டியே கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
புதினுக்கு அவரது பாதுகாப்பு படை பிரிவு மட்டும் இன்றி இந்தியாவின் என்.எஸ்.ஜி பிரிவும் சேர்த்தே வழங்க உள்ளது. டெல்லியில் புதின் செல்லும் வழிகளில் டிரோன் தாக்குதலை தடுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில் நுட்பம் கொண்ட பிரத்யேக கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. அவருக்காக பிரத்யேகமாக அவர் பயன்படுத்தும் ஆரஸ் செனட் ரக சொகுசு கார் விமானத்தில் நேற்றே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த கார் நகரும் அரண்மனை என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு பாதுகாப்பு மற்றும் ஆடம்பர வசதிகள் உள்ளதாம். ரஷ்ய ஆட்டோமொபைல் நிறுவனமான ஆரஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தால் 2018-ல் இந்த கார் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்தக் காரை ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் அதிபரின் பாதுகாப்பு கருதி நவீன பாதுகாப்பு வசதிகளுடன் இந்த காரை மேம்படுத்தி, அதிபர் பயணம் செய்வதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கார் ரஷ்ய ரோல்ஸ் ராய்ஸ் என்று அழைக்கப்படுகிறது. முற்றிலும் கருப்பு நிறத்திலான இந்த கார்
ஜன்னல் கன்னாடிகள் ஏவுகணை தாக்குதல்களையும் தாங்கும் வல்லமை கொண்டது.
தண்ணீரில் விழுந்தாலும் மிதக்கும் திறன் கொண்டது. பாதுகாப்பான இடத்தை எட்டும் வரை இந்த கார், தண்ணீரிலேயே மிதந்தபடி இயங்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் அனைத்து டயர்களும் அழிக்கப்பட்டாலும் கூட, அதிவேகத்தில் தொடர்ந்து செல்லும்.
ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டால், நச்சுக்காற்று உள்ளே புகாமல் இருக்க, ஏர் பில்ட்ரேஷன் அமைப்பு உள்ளது. 4.4 லிட்டர் இரண்டு டர்போ என்ஜின் திறன் கொண்ட இந்த கார், 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6-9 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் செல்லும். காருக்கு உள்ளேயும் கிளைமேட் கண்ட்ரோல், தொலைத்தொடர்பு வசதிகள் என வீட்டில் இருந்தபடியே இருப்பதை போன்ற உணர்வை கொடுக்கும் நவீன வசதிகள் உள்ளன.



