துபாய்
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கான விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் 2019ம் ஆண்டில் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடியதாகவும், மனப்பாங்கை பாராட்டியும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகப்படுத்த வேண்டும் என சைகை செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு தடைக்கு பிறகு களம் திரும்பிய ஸ்மித்தை ரசிகர்கள் அவமதித்தபோது கோலி இவ்வாறு செய்கை செய்தார். மேலும் 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி தேர்வாகியுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டின் ஒருநாள் போட்டி அணியில் கோலி, சமி, ரோகித், குல்தீப் ஆகிய இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.