Thursday, January 2, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்239 பேருடன் மாயமான மலேசிய விமானம் - 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது

239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது

எம்எச்370 (MH370) விமான விபத்தும் அப்படிப்பட்டதுதான். மலேசியாவிற்கு சொந்தமான எம்எச்370 விமானம் மாயமாகி 6 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் அந்த விமானத்திற்கு என்ன ஆனது? என்பதை யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்த எம்எச்370 விமானம், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி திடீரென மாயமானது. இதில், 239 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சீனாவை சேர்ந்தவர்கள். ஆனால் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு என்ன ஆனது? என்பது தெரியவில்லை.

மாயமான எம்எச்370 விமானத்தை கண்டறியும் பணியில், மலேசியாவிற்கு உதவியாக பல்வேறு நாடுகளும் களத்தில் இறங்கின. ஆனால் குறிப்பிடப்படும்படியாக எந்த தடயமும் சிக்கவில்லை. இந்திய பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு (46 ஆயிரம் சதுர மைல்) தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவை தோல்வியில்தான் முடிந்தன.

இறுதியில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த தேடுதல் பணிகளில் ஆஸ்திரேலியாவும் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, கடந்த 2018ம் ஆண்டு, தனியாக தேடுதல் பணிகளை தொடங்கியது. இந்த தேடுதல் வேட்டையானது சில மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் அதுவும் வெற்றி பெறவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், மலேசியாவின் எம்எச்370 விமானம் மாயமானது தொடர்பாக, ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் (Tony Abbott) திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இது பைலட்டால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதி என்கிற ரீதியில் டோனி அபோட் தெரிவித்துள்ள கருத்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தற்கொலை செய்யும் எண்ணத்துடன் எம்எச்370 விமானத்தை அதன் பைலட் வேண்டுமென்றே விபத்தில் சிக்க வைத்து விட்டார் என மலேசியாவின் முக்கிய உயரதிகாரிகள் நம்புவதாக டோனி அபோட் கூறியுள்ளார். பைலட்தான் திட்டமிட்டு இந்த விபத்தை நடத்தி விட்டதாக மலேசியா நம்புகிறது என விபத்து நடந்த ஒரு வாரத்திற்குள் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டோனி அபோட் பேசியுள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான கருத்துக்களை ஆவணப்படம் ஒன்றில், ஆஸ்திரேலிய மாஜி பிரதமர் டோனி அபோட் முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”மலேசிய அரசின் உயர் மட்டத்தில் இருந்து எனது தெளிவான புரிதல் என்னவென்றால், இந்த விபத்து நடைபெற்றதில் இருந்தே இது பைலட்டால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட சதி என அவர்கள் நினைத்தார்கள்” என்றார்.

இது பைலட்டால் நிகழ்த்தப்பட்ட மாஸ் மர்டர்-சூசைட் என டோனி அபோட் தெரிவித்திருப்பது பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. விமானம் விபத்தில் சிக்கிய சமயத்தில், மூத்த பைலட்டான ஸகாரி அகமது ஷா என்பவர்தான் பணியில் இருந்தார். அவர் மீதுதான் தற்போது இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என பைலட் ஸகாரி அகமது ஷாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அதே போன்று மலேசியாவின் சிவில் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அமைப்பின் முன்னாள் தலைவரான அஸாருதின் அப்துல் ரஹ்மானும் கூட, டோனி அபோட்டின் கருத்துக்களை விமர்சித்துள்ளார்.

டோனி அபோட்டின் கருத்துக்களை ஆதரிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அஸாருதின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை நீங்கள் முன்வைப்பதால், அந்த பைலட்டின் குடும்பத்தினர் மோசமாக உணர்வார்கள்” என்றார்.

உண்மை என்னவென்று உறுதியாக யாருக்கும் தெரியாத சூழலில், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ள கருத்துக்களும், அதற்கு எதிர்வினையாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments