மெக்காவிற்கு புனிதப்பயணம் செல்லும் யாத்திரிகர்களுக்கான விசாக்களை சவுதி அரேபிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், சென்னை மற்றும் மதுரையிலிருந்து புறப்பட இருந்தவர்களின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெக்காவிற்கு புனிதப்பயணம் செல்லும் யாத்ரீகர்களுக்கான விசாக்களை சவுதி அரேபிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து விமான நிலையங்களுக்கும் அவசர உத்தரவு ஒன்று பிறப்பித்தது. இதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் சவுதி அரேபியா செல்ல விமானத்தில் தயாராக இருந்த 66 பயணிகள், வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதே போன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா செல்ல இருந்த 170 பயணிகள், விமானத்தில் ஏறியிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.