மும்பை
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பையில் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றான தாராவியில், முதல் கொரோனா வைரஸ் மரணம் ஏற்பட்டுதை அடுத்து முன்னணி இந்திய மருத்துவர்கள் மிகவும் பயங்கரமான தாக்குதலை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த பகுதியில் அதிக அளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் உள்ள தாராவியில் 56 வயது நபர் புதன்கிழமை உயிரிழந்தார். அவருக்கு எந்த பயண வரலாறும் இல்லை, உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இறந்தார் என்று மும்பை நகர அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் பரிசோதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 300 வீடுகள் மற்றும் 90 கடைகள் நிரம்பிய அவர் வாழ்ந்த பகுதி தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் வகையில் சீல் வைக்கப்பட்டுள்ளன.
தாராவியில் உள்ள பிரஹன் மும்பை மாநகராட்சியில் பணிபுரியும் 52 வயதான துப்புரவாளருக்கு, வியாழக்கிழமை கொரோனா இருப்பது உறுதியானது.
மேலும் தாராவியை சோ்ந்த 35 வயது டாக்டருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டாக்டருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் தாராவியில் 3-வது நபரை கொரோனா தாக்கி உள்ளது.
இது தாராவி மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள தாராவியில் கொரோனா பரவலை மாநகராட்சி எப்படி தடுக்க போகிறது என்ற கேள்வியும் மக்கள் இடையே எழுந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் வசித்து வந்த கட்டிடத்தை மாநகராட்சி சீல் வைத்து உள்ளது. மேலும் கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளையும் கண்டறியும் பணி நடந்து வருகிறது.
சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கும் தாராவி நியூயார்க் நகரத்தை விட கிட்டத்தட்ட 30 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்டுள்ளது, சதுர கிலோமீட்டருக்கு சுமார் 2,80,000 மக்கள் வாழ்கின்றனர்.அங்கு நல்ல சுகாதார வசதிகள் இல்லை மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அருகருகே வாழ்கின்றனர், சமூக இடைவெளி உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாத்தியமற்றதாக ஆக்குகிறது.
தாராவி ஊடாக கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவினால் நிலைமையை நிர்வகிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.