தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 527 பேர் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு சென்ற வியாபாரிகள் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (மே 4) அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 527 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று ஒருவர் இறந்துள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.