புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணக்கட்டணத்தை அவர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது எனவும் மாநில அரசுகளே பயணக்கட்டணத்தை ஏற்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதிலும், அவர்களுக்கு வாகன வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்த நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவும், குடிநீரும் வழங்குவதிலும் குறைபாடுகள் இருப்பதாக கவலை தெரிவித்தது.
புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து பயணக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், பயண கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடந்து செல்லக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து இந்த வழக்கு ஜூன் மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.