பின்னர் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் தவணைகளை தாமதமாக செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. இது, கடனை தாமதமாக செலுத்த கூடுதல் கால அவகாசம் மட்டுமே தவிர கடன் தள்ளுபடியல்ல என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, கடன் தொகைக்கு வட்டித் தள்ளுபடி செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் ரிசர் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், வட்டித் தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், மக்களின் நலனை விட பொருளாதாரம் உயர்ந்தது அல்ல எனவும், கடனை செலுத்த அவகாசம் அளித்துவிட்டு வட்டி தள்ளுபடி செய்யவில்லை என்றால் ஆபத்து ஏற்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று மாதங்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியுமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது குறுக்கிட்ட எஸ்பிஐ தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “ஆறு மாத காலத்திற்கும் வட்டித் தள்ளுபடி செய்யக்கூடாது என அனைத்து வங்கிகளும் கருதுகின்றன” என தெரிவித்தார். இதுகுறித்து ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து ஆலோசிக்க 3 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும், நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்படி சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நீதிபதி அசோக் பூஷன் கேட்டுக்கொண்டார். மேலும் அவர், “நாம் தற்போது சந்திப்பது சாதாரண சூழ்நிலையல்ல. இது ஒரு முக்கிய பிரச்சினை. ஒருபக்கம் கடனை தாமதமாக செலுத்த அவகாசம் அளித்துவிட்டு, மறுபக்கம் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
|