சென்னை
தமிழகத்தில் இன்று (ஜூன் 14) ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆகவும், பலி எண்ணிக்கை 435 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்த பாதிப்பு 44,661 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 18,782 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,10,599 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 31 பேரும், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், விழுப்புரம், மதுரை, செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய உயிரிழப்புகளில் 22 பேர் அரசு மருத்துவமனையிலும், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19,676 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,270 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 37,252 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 5,139 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.