புதுடில்லி
பெட்ரோல், டீசல் விலை உயர்வால், கடந்த 6 நாளில் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடியும், மார்ச் 5 முதல் ரூ.2.50 லட்சம் கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை படு வீழ்ச்சியடைந்து, பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.
ஊரடங்கால், பெட்ரோல், டீசல் விலை ஒரே நிலையில் நீடித்திருந்த நிலையில், கடந்த 7 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 90 பைசாவும், டீசல் 4 ரூபாயும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போதும், அதன் பலனை மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால், கடந்த 6 நாட்களில் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது, இதுவே, கடந்த மார்ச் 5ம் தேதியிலிருந்து, ரூ.2.50 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, மக்களுக்கு உதவி செய்ய, பிரதமர் மோடி நினைத்திருந்தால், பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பார்.
அடிப்படை விலையிலிருந்து பெட்ரோலுக்கு 270%, டீசலுக்கு 256% வரி வசூலிக்கப்படுவதாக கேர் ரேட்டிங் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் வாட் வரி 19%, ஜப்பானில் 47%, பிரிட்டனில் 62%, பிரான்சில் 63 சதவீதம், ஜெர்மனியில் 65 சதவீதம்தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தான் உலக நாடுகளில் அதிகபட்சமாக 69% வாட் வரி வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.