டெல்லி
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பதற்றத்தைத் தணிக்க சம்பவ இடத்தில் இரு நாட்டின் ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என இந்திய ராணுவம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த மோதல் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
எனினும் லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய பகுதிக்கு அத்துமீறி சீன ராணுவத்தினர் நேற்று இரவு நுழைந்தனர். அப்போது அவர்களை வெளியேற்றும் முயற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய வீரர்கள் மீது சீன ராணுவம் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்திய வீரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில் சீனாவை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகிவிட்டதாக அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதே தவிர சீனாவில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்பது குறித்து இந்தியா உறுதிப்படுத்தவில்லை.
எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுவதாக தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் சீன ராணுவத்தின் தாக்குதல் குறித்து கேட்ட போது ஒரு தலைபட்ச நடவடிக்கைகளையோ அல்லது சிக்கலை தூண்டிவிடுவதோ கூடாது என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் தணிக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. அது போல் எல்லை பகுதிகளில் அமைதி நிலவவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவத்தினர் சாலை பணிகளை மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லடாக் எல்லையில் கடந்த மே மாதம் பாங்கோ லேக் பகுதியில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர்.
இதையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே எல்லையில் சீனா போர் விமானங்கள், ஆயுதங்களுடன் ஏராளமான வீரர்களையும் குவித்தது. இதனால் சீனா பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதும், போர் புரிய ஆயத்தமாகி வருவதும் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த மாதம் 6-ஆம் தேதி சீன எல்லையில் இரு நாட்டின் லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாட்டு படைகளும் பின்வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு நடந்தது முதல் தாக்குதல் ஆகும்.