இந்தியா-சீனா இடையே சில தினங்களுக்கு முன் நடந்த சண்டையைத் தொடர்ந்து அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்களைக் காணவில்லை என இந்தியா அறிவித்திருந்தது. இந்த சூழலில் அவர்கள் சீன ராணுவத்தால் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் 3 தினங்களுக்கு முன் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே சண்டை வெடித்தது. இந்த சண்டையில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சண்டையின்போது சீனாவுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே இந்தியா தரப்பில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்களைக் காணவில்லை என இந்திய ராணுவம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
சீனாவிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, காணாமல் போனவர்களைச் சீனா அடைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்களை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தை காரணமாக 10 ராணுவ வீரர்களும் வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சீனா வசம் சிக்கியிருந்த ராணுவ வீரர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராணுவ அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்” எனக் கூறியுள்ளது.