நெய்வேலி அனல்மின் நிலையத்தில் 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2வது அனல்மின் நிலையத்தின் பொதுமேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே கடந்த மே மாதம், 6வது யூனிட்டில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்தேன். சம்பவ இடத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், மீட்பு பணிகளில் உதவி வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில், அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2வது அனல்மின் நிலையத்தின் பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.