பார்முலா 1 கார்பந்தயத்தின் 3-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட் பிரி அங்குள்ள மொக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.63 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.
1 மணி 36 நிமிடம் 12.473 வினாடிகளில் இலக்கை முதலாவதாக கடந்து 26 புள்ளிகளை அவர் தட்டிச் சென்றார். இந்த சீசனில் ஹாமில்டனின் 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 8.7 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தையும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 3-வது இடத்தையும் (மெர்சிடஸ் அணி) பிடித்தனர். முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஹங்கேரி கிராண்ட்பிரியில் ஹாமில்டன் வெற்றியை ருசிப்பது இது 8-வது முறையாகும். ஏற்கனவே 2007, 2009, 2012, 2013, 2016, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு அவர் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் பிரெஞ்ச் கிராண்ட்பிரியில் 8 முறை வெற்றி பெற்றவரான ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்.
4-வது சுற்று போட்டி ஆகஸ்டு 2-ந்தேதி இங்கிலாந்தில் நடக்கிறது.