Wednesday, January 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்அமெரிக்க அதிபர் தேர்தல் - இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் – இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு

டிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், வரும் 15 ஆம் தேதி அமெரிக்காவின் மியாமி நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதத்தை இணைய வழியே நடத்த வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இணைய வழி விவாதத்துக்கு டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளதால், வரும் வாரங்களில் நடைபெற வேண்டிய அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் எங்கு, எப்படி நடைபெறும் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. டிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்பு, அதாவது கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற விவாதம் அவமதிப்புகள் மற்றும் குறுக்கீடுகள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, ஜோ பைடன் தேசிய அளவில் ஒற்றை இலக்க வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், தேர்தல் முடிவானது, இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் முக்கிய மாகாணங்களின் இறுதி வாக்குப்பதிவை பொறுத்தே அமையும்.

தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை சுமார் 60 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். முன்னதாக, இந்த விவாதம் குறித்து தொலைபேசி வாயிலாக அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியான ஃபாக்ஸ் பிசினஸ் சேனலிடம் பேசிய டிரம்ப், “ஒரு கணினிக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு நடைபெறும் மெய்நிகர் விவாதத்தில் பங்கேற்று என் நேரத்தை வீணடிக்க போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், “டிரம்ப் தனது முடிவுகளை ஒவ்வொரு நொடிக்கும் மாற்றுகிறார்” என்று கூறினார்.

இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி வழக்கமான முறைப்படி, மியாமியில் விவாதத்தை நடத்துவதற்கு ஜோ பைடனின் பிரசார குழு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments