கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்ட்டன.
தமிழ்நாட்டில் இந்த வாரம் திறக்கப்படலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. விஜயதசமிக்குள் தியேட்டர்களைத் திறந்தால் நன்றாக இருக்கும் என தியேட்டர்காரர்கள் தரப்பில் எண்ணுகின்றனர். அதற்கு அனுமதி கிடைக்கும் என்றே தெரிகிறது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி 50 சதவித இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெறும் 50 சதவீத வசூல் கிடைத்தால் வியாபார ரீதியாக பெரிய படங்கள் பாதிக்கப்படும். அதனால் பெரிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை.
தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ வெளிவந்தால் நன்றாக இருக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், 200 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இப்படம் அன்று வெளிவர வாய்ப்பில்லை. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைக்கும் போது மட்டுமே படத்தை வெளியிட வாய்ப்புள்ளது.
எனவே, இந்த தீபாவளிக்கு 3 சிறிய படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’, ஜீவா, அருள்நிதி நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’, ஆபாசப் படமான ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்கள் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.