வாஷிங்டன்
பென்சில்வேனியா மற்றும் ஜார்ஜியாவிலும் ஜோ பிடன் முந்தியுள்ளார். டிரம்பைவிட அதிக வாக்குகள் பெற்று இங்கு முன்னிலை வகிக்கிறார். ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவு வாக்குகளே வித்தியாசம் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து இன்றுடன் மூன்று நாட்கள் கடந்துவிட்டது. செவ்வாய் அன்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வரை வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வரலாற்றில் இல்லாத அளவுக்கு தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகி உள்ளது. மேலும் திரளான மக்கள் தேர்தல் அன்று வாக்களித்தார்கள். இது டிரம்புக்கு பின்னடைவாக மாறி உள்ளது. குறிப்பாக தபால் வாக்குகள் குறித்து டிரம்ப் நேரடியாக அச்சத்தை வெளிப்படுத்தினார்.
தேர்தலுக்கு முன்பு இருந்தே, தபால் வாக்குகள் மூலம் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக எசசரித்தார். தேர்தல் முடிந்த பின்னர் தபால் வாக்குகளால் தன் தலையெழுத்து மாறப்போவதை உணர்ந்து அதை எண்ணக்கூடாது என்று எதிர்த்தார். உச்சநீதிமன்றம் சென்றாவது தடுத்த நிறுத்த வேண்டும் என்பதில் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், முதல் முறையாக பென்சில்வேனியாவில், அதிபர் டொனால்ட் டிரம்பை விட அதிக வாக்குகள் பெற்று முன்னேறியுள்ளார். அதிபர் பதவியைக் கைப்பற்றத் தேவையான 270 தேர்தல் வாக்குகளை இந்த வெற்றி மூலம் எட்டப்போவது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே கீஸ்டோன் மாகாணத்தில் பிடன் வெற்றியாளராக அறிவிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கே நிலுவையில் உள்ள வாக்குகள் செல்லும் என்று வாதிடப்பட்டது. ஆனால் காலமும், போட்ட கணக்கும் அப்படியே பிடனின் பக்கம் மாறி உள்ளது.
தற்போதைய நிலையில் பென்சில்வேனியாவில் 20 தேர்தல் வாக்குகள் உள்ள மாகாணம் ஆகும். ஜனநாயகக் கட்சியினரை 2016 வரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்ற “நீலச் சுவர்” என்று அழைக்கப்பட்ட பகுதியாகும். இதை இப்போது பிடன் கைப்பற்ற போகிறார். இதேபோல் மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களையும் கைப்பற்றி உள்ளார்.
முன்னதாக பென்சில்வேனியாவில் டிரம்ப் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றார், ஆனால் பிடன் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கோட்டை நெருங்கி வருகிறார். தொற்றுநோய் குறித்த கவலைகள் காரணமாக ஜனநாயகக் கட்சியினர் அஞ்சல் மூலம் அதிக அளவில் வாக்களித்துள்ளதால் பிடனுக்கு சாதமாகிவிட்டது.
கடந்த 24 மணி நேரத்தில், ட்ரம்ப்புக்கு ஆதரவு சுருங்கி உள்ளது. அவருடைய பிரச்சார உதவியாளர்கள் முன்கூட்டியே அவர்கள் மாநிலத்தை வென்றதாக அறிவித்த காரணத்தால் தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக டிரம்ப் தவறாகக் கூறினார். ஆனால் நிலைமை அப்படியாக இல்லை. தபால் வாக்குகளால் டிரம்ப் தோல்வியை நெருங்கி உள்ளார்