மழை பெய்யும் போதெல்லாம் நாம் செய்திகளில் 10மில்லி மீட்டர் பெய்தது, 15 மிமீ பெய்தது என்று படிக்கிறோம். அப்படி என்றால் எவ்வளவு மழை பெய்திருக்கும் என்று தெரியுமா?
உண்மையில் ஒரு மில்லி மீட்டர் மழை என்பது எவ்வளவு?
ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது என்றால்… ஒரு சதுர மீட்டருக்கு ஒரு லிட்டர் என்று பொருள். அதாவது ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் சதுரப் பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் நிரம்பியிருக்கிறது என்று அர்த்தம்.
இதுவே உங்கள் வீட்டு மொட்டைமாடி ஆயிரம் சதுர மீட்டர் போன்ற தொட்டி போல் இருக்கிறது என்றால் அந்த மொட்டை மாடியில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேர்ந்திருக்கும். அதுவே பத்து மில்லி மீட்டர் மழை பெய்திருந்தால் பத்தாயிரம் லிட்டர். தோராயமாக அந்தத் தண்ணீரை வைத்து ஒரு தண்ணீர் லாரியை நிரப்பிவிடலாம்.
இந்த ஒரு மில்லிமீட்டர் உங்கள் மொட்டை மாடி தாண்டி உங்கள் காலனி மொத்தமும் பெய்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது உங்கள் காலனி ஒரு லட்சம் சதுர மீட்டர் என்றால் அங்கே ஒரு லட்சம் லிட்டர் சேர்ந்திருக்கும், உங்கள் ஊர் பத்து லட்சம் சதுர மீட்டர் என்றால் உங்கள் ஊர் மொத்தமும் சேர்ந்து பத்து லட்சம் லிட்டர் கிடைத்திருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.
இது ஒரு மில்லி மீட்டருக்கு. இதுவே பத்து மில்லி மீட்டர் என்றால் பத்து மடங்கு அதிகரிக்கும்.
இதுவும் ஒரு இடத்தில் ஒரு சமயத்தின் அளவை வைத்து மழை அளவைச் சொல்வார்களா என்றால்…. மாட்டார்கள்..
சுமார் 20 முதல் 30 கிமீ இடையிலான மொத்தப் பரப்பில் பெய்த மழையின் அளவுகளை பல்வேறு இடங்களில் மழைமானியைக் கொண்டு 24 மணிநேரம் மணிக்கு ஒருமுறை எடுத்து, அவற்றின் மொத்தத்தின் சராசரி தான்.. உங்களுக்கு இத்தனை மில்லிமீட்டர் பெய்தது என்று மழையின் அளவாகச் சொல்லப் படுகிறது.
இந்த மழை அளக்கும் மழை மானிக்கும் அளவு வரையறைகள் உண்டு.
சாதாரணமாக ஒரு ஒன்றரை அடி உயரம், 200 மிமீ விட்டத்தில் உள்ள ஒரு குடுவையின் வாய்ப்பகுதியில் ஒரு புனல் வைத்து அது சேகரிக்கும் அளவே மழையின் அளவாகக் கொள்கிறார்கள்.
அப்படியென்றால் விடாமல் மழை பெய்யும் போது மழைமானி நிரம்பினால் எப்படி எவ்வளவு மழை பெய்தது என்று தெரியும்.?
அதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
நாம் மேலே சொன்னது சாதாரண மழை மானி. இதன் கீழேயே ஒரு ஐந்து லிட்டர் கேனை இணைத்து மழை மானி நிரம்பியதும் கீழே சேகரித்துக் கொண்டு இது காலியாகி அடுத்த அளவீடைத் துவங்கும் வகையில் செய்திருப்பார்கள்.
இதுபோக மழையின் அளவை மணிக்கொரு முறை கிராஃப் ஷீட்டில் வரையும் தானியங்கி மழைமானி, செயற்கோளுக்குத் தகவல் சொல்லும் மழை மானிகளும் உண்டு.
மழையை முதன்முதலில் அளந்ததவர் யார் என்று பார்த்தால்… கி.மு. 340 ல், மழை, மேகம், பனி, குளிர் என அனைத்தையும் பற்றித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அரிஸ்டாட்டில், மழையை அளப்பது பற்றி எதுவும் கூறவில்லை.
மண்ணைத் தோண்டி மழை ஈரத்தின் ஆழத்தை வைத்து உழவு செய்த தனது நாட்டு மக்களுக்காக, முதன்முதலாக மழை மானியை உருவாக்கியவர் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கொரிய மன்னர் “செஜான்” (Sejong) என்பவர்தானாம்.
அதுவும் அதைக் கொண்டு, எந்த ஊரில் எவ்வளவு மழை பெய்தது என்பதை வைத்து யாருக்கு எவ்வளவு வரி தீட்டலாம் என்று திட்டமிடுவதற்காகத்தான் உண்மையில் இந்த முறையைக் கொண்டு வந்தாராம்..
ஆனால், தற்போது உலகெங்கும் பயன்படுத்தப்படும் மழை அளமானியை 1662ல் கண்டுபிடித்தவர், ஐரோப்பாவைச் சேர்ந்த “கிறிஸ்டோபர் ரென்” என்பவர்..
இருபத்து நான்கு மணி நேரத்தில், 7.4மில்லி மீட்டர் வரை பெய்தால் அது சாதாரண மழை என்கிறார்கள்.
அதுவே 34.9.மி.மீ வரை பெய்திருந்தால் அது சுமாரான மழை.
56.5 மி .மீ வரை சற்றே கனத்த மழை என்றும் அதற்கும் மேல் 120 மி.மீ வரை பெய்தால் கனத்த மழை என்கிறார்களாம்.
இதற்கு மேல் எவ்வளவு பெய்தாலும் அது மிகக் கனத்த மழைதானாம்.
இதுபோக வெள்ளம் தனி.
இதெல்லாம் இப்படி இருக்க…
கோவைப் பகுதியில், சிறுவிவசாயிகள் மழையை
ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன்.
அது என்ன ஒரு உழவு மழை என்றால் பெய்த மழையில் பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அதுதான் ஒரு உழவு மழை.
அப்படி என்றால் மண்ணின் தன்மையைப் பொறுத்து இந்த உழவு மழையின் அளவு மாறும் அல்லவா.? அப்போது உழவு மழை என்பதற்கான உண்மையான அளவுதான் என்ன.?
சரி….நமக்குப் புரிகிற மாதிரி சொன்னால்… ஒரு உழவு மழை என்பது சதுர அடிக்கு நாலரை லிட்டர் தண்ணீர் என்பதுதான் என்று சொல்கிறார்கள். உத்தேசமாக ஒரு சதுரமீட்டருக்கு ஐம்பது லிட்டர் என்பது ஒரு உழவு மழை எனக் கொள்ளலாம்.
தோராயமாக நம்மிடம் 25 ஏக்கர் நிலமிருந்தால், அதற்கு இரண்டே முக்கால் ஏக்கர் அகலத்தில் ஏழு அடி ஆழத்துக்கு ஒரு குட்டையை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும் என்பது நம் விவசாயிகளின் உழவு மழைக் கணக்கு.
நன்றி
NEWS WINGS