உப்பள்ளி, கர்நாடகா.
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா ராபகவி பகுதியை சேர்ந்தவர் நடிகை உமாஸ்ரீ. இவர் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் நடிகை உமாஸ்ரீக்கு சொந்தமான கார் கடந்த 21-ந்தேதி கதக்கில் இருந்து உப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச் சென்றார். ஆனால் காரில் நடிகை உமாஸ்ரீ இல்லை.
இந்த காரும், உப்பள்ளியில் இருந்து பல்லாரி நோக்கி சென்ற ஒரு காரும் உப்பள்ளி தாலுகா பாண்டிவாடா பகுதியில் சென்ற போது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒரு பெண் பலத்த காயமடைந்தார். அதுபோல் நடிகை உமாஸ்ரீயின் கார் டிரைவர் சிவக்குமாரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில், நடிகை உமாஸ்ரீயின் கார் மீது மோதியது தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா பெலஹாராவில் பணியாற்றி வரும் சுகாதார அதிகாரி டாக்டர் ஸ்மிதா குட்டிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
மேலும் ஸ்மிதா குட்டி, அவரது தாய் ஷோபா குட்டி, டிரைவர் சந்தீப் விபூதிமட் ஆகியோர் உப்பள்ளியில் இருந்து பல்லாரிக்கு சென்ற போது விபத்து நடந்ததும், இந்த விபத்தில் ஷோபா குட்டி, டிரைவர் சந்தீப் விபூதிமட் ஆகியோர் உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும் பலத்த காயமடைந்தது ஸ்மிதா குட்டி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காயமடைந்த டாக்டர் ஸ்மிதா குட்டி, சிவகுமார் ஆகியோர் உப்பள்ளி உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நடிகை உமாஸ்ரீ ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஸ்மிதா குட்டி நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். சிவக்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் காயமடைந்த ஸ்மிதா குட்டி ஒரு வாரத்திற்கு பிறகு உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.