தனது அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை விரைவில் அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவுற்ற பிறகு போயஸ் கார்டன் பகுதியிலுள்ள தனது இல்லத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களின் கருத்தை நான் கேட்டறிந்தேன். அதேபோன்று எனது பார்வையையும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். பிறகு, “நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எனவே, நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான மண்டபத்தில் நடைபெற்று வரும் மக்கள் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அரசியலில் களமிறங்குவது குறித்து ரஜினி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ரஜினியின் மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்திற்கொண்டு இந்த கூட்டத்தில் ரஜினி காணொளி வாயிலாக பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் நேரடியாகவே பங்கேற்றுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போயஸ் கார்டன் பகுதியிலுள்ள ரஜினிகாந்த் இல்லம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் ராகவேந்திரா மண்டபம் உள்ளிட்ட இடங்களில் ரஜினியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர்.