ஜல்பைகுரி
பீகார் சட்டசபை தேர்தலிலும் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலும் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்க பாஜக பணம் கொடுத்தது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:
பாரதிய ஜனதா கட்சியை விட மிகப் பெரிய திருடர்கள் யாரும் இருக்க முடியாது. சம்பல் கொள்ளையர்களைப் போன்றவர்கள்.
2014, 2016, 2019- தேர்தல்களில் 7 தேயிலை தோட்டங்கள் திறக்கப்படும் என உறுதி மொழி தந்தனரே, செய்யவில்லையே. இப்போது மீண்டும் வேலைவாய்ப்பு வழங்குவோம் என்கின்றனர். அவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.
சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து ஹைதராபாத்தில் அதிக இடங்களில் பாஜக வென்றது. சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்க பாஜக பணம் கொடுத்தது. பீகார் தேர்தலில் இது நிரூபிக்கப்பட்டது.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் என அனைத்தையும் செயல்படுத்துவோம் என்கிறது பாஜக. என்.ஆர்.சிக்கும் என்.பி.ஆருக்கும் என்னதான் வித்தியாசம் இருக்கிறது? என்.ஆர்.சி. அமல்படுத்தப்பட்ட போது 19 லட்சம் வங்காளிகள், அஸ்ஸாமிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்களே? அதற்கு என்ன பதில் இருக்கிறது?
ஜே.பி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது யாரும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று நடத்தவில்லை. அவரை யார் குற்றவாளிகளை எல்லாம் உடன் அழைத்துவர சொன்னது? அதுதான் பிரச்சனைகே காரணம்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்த தேசத்தின் வரலாற்றையே மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள். இப்போது தேசிய கீதத்தையும் மாற்ற முயற்சிக்கிறார்கள். அப்படி எல்லாம் தேசிய கீதத்தை நீங்கள் மாற்றினால் மேற்கு வங்க மாநிலம் சரியான பதிலடியை தரும்.
கூர்க்காலாந்து பிரச்சனைக்கு என்னதான் தீர்வு வைத்திருக்கிறீர்கள்? ஏன் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை பிரச்சனைக்கு பாஜகவால் தீர்வு காண முடியாமல் போனது? டார்ஜிலிங் மக்களின் பிரச்சனைக்கு பாஜக ஒருபோதும் உரிய நீதியை வழங்காது. மேற்கு வங்க மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு தேவையில்லாமல்ல் தலையிடுகிறது. இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.