ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்ற பெயரில், சென்னை மாநகர மக்கள், இனி சொத்து வரியுடன் கூடுதலாக, குப்பை கொட்டக் கட்டணம் செலுத்த வேண்டும் என, மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. கொரோனா முடக்கத்தால் வருமானம் இன்றிப் பரிதவிக்கும் மக்கள் மீது, மேலும் ஒரு அடி விழுந்து இருக்கின்றது. 1000 பேருக்கு மேல் கூடுகின்ற நிகழ்ச்சிகளை நடத்துவோர், 20000 ரூபாய் கட்ட வேண்டும் என, கூட்டத்திற்கு ஏற்றவாறு பல வகையான கட்டணங்களையும் அறிவித்து இருக்கின்றார்கள். இதனால், அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல, திருமணம், கோவில் திருவிழா என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
இத்தகைய முடிவுகளை, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநகராட்சி மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அண்ணா தி.மு.க. அரசு செய்த குழப்பங்களால், தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட ஊர் ஆட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்தவில்லை. அடுத்த நான்கு மாதங்களில், சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில், இத்தகைய அறிவிப்பு தேவை அற்றது.
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே, அனைத்துத் தெருக்களிலும் கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான கார்கள், இலட்சக்கணக்கான இரு உருளை ஊர்திகள் பல ஆண்டுகளாகக் கிடக்கின்றன. அவற்றைச் சுற்றி குப்பைகள் குவிந்து, சிறுநீர் கழிப்பிடமாக, கொசுக்களின் பிறப்பிடமாக ஆகி இருக்கின்றது. ஆனால், அத்தகைய கழிவுகளையும், மலைபோல் குவியும் குப்பைகளையும் அகற்றுவதற்கு, போதிய நடவடிக்கைகளை சென்னை மாநராட்சி மேற்கொள்ளவில்லை.
குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, இன்றுவரையிலும் சீருடைகள் வழங்கவில்லை. அமைச்சர்கள் பவனி வருகின்ற கடற்கரைச் சாலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே, சீருடைகள் வழங்கி இருக்கின்றார்கள். மற்ற இடங்களில், பெண்கள் சேலை அணிந்துதான் குப்பைகளை அகற்றுகின்றார்கள்; அப்போது கிளம்பும் மணல் தூசுகள், அவர்களுடைய உடையில்தான் முழுமையாகப் படிகின்றது. மேலும், ஊர்திகள் மோதாமல் இருக்க அவர்கள் அணிந்து இருக்கின்ற ஒளிரும் பட்டைகளுக்கும் கூட, 100 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் கொடுத்து இருக்கின்றார்கள். 21 ஆம் நூற்றாண்டிலும்கூட, தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்காமல் இருப்பது வேதனைக்கு உரியது. எனவே, சென்னை மாநகரில் பணிபுரிகின்ற ஆண், பெண் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும், மாநகராட்சி உடனே சீருடைகள் வழங்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டண அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என கூறியுள்ளார்.