இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki), டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசுகி (Maruti Suzuki) ஜனவரி 18 முதல் கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்தியுள்ளது.
ஸ்டீல் மற்றும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாருதியின் கார் ரேஞ்சின் விலை அதன் என்ட்ரி லெவல் சிறிய கார் ஆல்டோவுக்கு ரூ. 2.95 லட்சத்தில் தொடங்கி பிரீமியம் ஆறு இருக்கைகள் கொண்ட MPV, XL6 வரை ரூ. 11.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்-டெல்லி) வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Altoவின் விலை முன்பு இருந்ததை விட சுமார் 9,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும், எஸ்பிரெசோவுக்கு (Espresso) சுமார் ரூ. 7,000 கூடுதலாகும். இதேபோல், பலேனோ, பிரெஸ்ஸா மற்றும் செலெரியோவிற்கு (Baleno, Brezza and Celerio) முறையே இந்த உயர்வு ரூ.19,400, ரூ.10,000 மற்றும் ரூ.14,400 ஆக இருக்கும். வேகன் ஆர் (Wagon R) காருக்கு ரூ.2,500 முதல் ரூ .18,200 வரை கூடுதலாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மாருதி நிறுவனம் கார்களை எப்படியாவது விற்றுவிடவேண்டும் என்று ஒருபக்கம் போராடி வரும் நிலையில் கார்களின் விலைகளை அதிகரித்திருப்பது கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு சில தாக்கங்களை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே மாருதி, 2021ம் ஆண்டு தொடக்கத்தில் கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்தியது, இருந்தும் இப்போதுள்ள இந்த விலையேற்றம் மாருதி காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை சற்றே திக்குமுக்காட வைத்துள்ளது.
நவம்பர் 2020ல், மாருதி சுசுகி மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் 2.4 சதவீதம் சரிவை (1,35,775 யூனிட்கள்) கொண்டிருந்தது. கடந்த 2019ல் இதே காலகட்டத்தில் 1,39,133 யூனிட்கள் சரிவை சந்தித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகி தவிர, கியா, ஹூண்டாய், மஹிந்திரா, ஹோண்டா, ரெனால்ட், ஃபோர்டு, ஸ்கோடா, வோக்ஸ்வாகன், நிசான் மற்றும் டாட்சன் போன்ற சில கார் தயாரிப்பாளர்களும் ஜனவரி 2021 முதல் விலை உயர்வுகளை அறிவித்துள்ளனர்.
வேரியண்ட்களுக்கேற்ப விலை உயர்வின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
Alto: ரூ .9,000 வரை உயர்ந்துள்ளது
Espresso: ரூ .7,000 வரை உயர்ந்துள்ளது
Baleno: ரூ .19,400 வரை உயர்ந்துள்ளது
WagonR: ரூ .2,500 அதிகரித்து ரூ .18,200 வரை உயர்ந்துள்ளது
Brezza: ரூ .10,000 வரை உயர்ந்துள்ளது
Celerio: ரூ .14,400 வரை உயர்ந்துள்ளது
கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலையால் வாகனங்களுக்கான தேவை குறைந்து விற்பனை மந்தமாகியுள்ளது. இதில் கொரோனா பாதிப்பும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அளவை ஒவ்வொரு மாதமும் குறைத்து வருகின்றன. பெட்ரொல் – டீசல் விலையேற்றம், உதிரிப் பாகங்கள் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, வாகன எஞ்சின் மாற்ற விதிமுறைகள், எலெக்ட்ரிக் வாகன மாற்றத்துக்கான நெருக்கடி போன்ற காரணிகள் ஆட்டோமொபைல் துறையினரை கடுமையாகப் பாதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.