தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படை ஆயுதப் போரில் ஈடுபட்டதுபோல வெகுவிரைவில் போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக இலங்கை போர் தொடுக்கும் நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும், சிவில் அமைப்பைச் சேர்ந்தவருமான சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை நினைவுகூறும் வகையில் கொழும்பு மருதானையிலுள்ள சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
சர்வதேசத்தை நாம் எதிர்த்துக் கொள்ளக்கூடாது. கடந்த காலங்களாக சிவில் அமைப்புக்களை டாலர்களுக்கு அடிபணிகின்றவர்கள் என்றும், அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சூழ்ச்சிகள் என்றும் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கூட தெரிவித்திருந்தார். ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது? ஈஸ்டர் தாக்குதல் குறித்து உள்நாட்டு விசாரணையில் திருப்தி இல்லாததால் சர்வதேசத்தை நாடப்போவதாக அவரே அறிவித்திருக்கின்றார்.
இன்று போர்ச்சூழல் இல்லை. இருப்பினும் தீவிரவாத செயலினால் நூற்றுக்கணக்கானவர்கள் ஈஸ்டர் தாக்குதலில் பலியாகியிருக்கின்றனர். பௌத்த தர்மத்திற்கு முதலிடம் வழங்குகின்ற நாடாகிய ஸ்ரீலங்கா இன்று இந்த தாக்குதல் பற்றிய முழுமையான உண்மையான விசாரணையை நடத்தியாக வேண்டும்.
2019ஆம் ஆண்டு என்பது சாத்தானை நோக்கிய ஸ்ரீலங்காவின் பயணமாகவே கருதப்படுகின்றது. ஜனநாயகத்திற்கெதிரான கொடுங்கோல் ஆட்சியே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேசத்தின் சூழ்ச்சியொன்று இருக்கின்றது என்பது சட்டமா அதிபர், ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றதென்றால் எமக்கும் அதன் மீது சந்தேகம் காணப்படுகின்றது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவதும் எனது தாய்நாடே பிரதானம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
ஆனால் எதிர்காலத்தில் போர்ட் சிட்டியை சீனாவிடத்திலிருந்து காப்பாற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதப் போரில் ஸ்ரீலங்கா படை ஈடுபட்டது போல மீண்டும் யுத்தத்தில் ஈடுபடவேண்டிய அபாயம் ஏற்படும் என்றார்.