பெங்களூருவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்த ஒருவருக்கு போலீசார் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் வெளியே வந்துகொண்டுதான் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் நேற்று பெங்களூரு மதனய கனாஹல்லி காவல்துறையினர், ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்த 32 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 2 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து விநோத முறையில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரல்.
இது குறித்து மதனய கனாஹல்லி காவல் ஆய்வாளர் மஞ்சுநாத் கூறும்போது, வாகன ஓட்டிகள் எங்கள் பேச்சை கேட்கவில்லை. ஆகையால் இதுதான் ஒரே வழி. தகரங்களை வைத்து அடைத்தோம், வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தோம், கொரோனா குறித்து விழிப்புணர்வுகளை ஏற்பத்தினோம். ஆனால் ஒன்றும் வேலை செய்யவில்லை. ஆகையால் தான் இந்த வழிமுறை மூலம் பாடம் புகட்ட எண்ணினோம். அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரவல் குறித்து பாடத்தையும் புகட்டினோம் என்றார்.