சமூகவலைதளங்களில் ஆசிரியர் ராஜாகோபாலன் மீது வைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் திகைக்கச் செய்கின்றன. இதில் பல குற்றச்சாட்டுகள் 19 ஆண்டுகள் முன்பு வரை நீள்கின்றன
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருபவை பத்ம சேஷாத்ரி பாலபவன் (பிஎஸ்பிபி) குழும பள்ளிகள். ஒய்.ஜி.பி. என்று அழைக்கப்பட்ட கல்வியாளர் ராஜலஷ்மி பார்த்தசாரதியால் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம் சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும், தென் மாநிலங்களிலும் இக்குழும பள்ளிகள் இயங்கிவருகிறது.
இந்நிலையில், கே.கே.நகர் பிஎஸ்பிபி பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கணக்குப் பதிவியல் மற்றும் வணிகப் படிப்புகள் ஆசிரியரான ராஜகோபாலன், பாலியல் நோக்கங்களோடு மாணவிகளை அணுகியிருப்பதை, முன்னாள் மாணவர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட இப்பிரச்னை கவனத்துக்கு வந்திருக்கிறது.
மாணவர்களுக்கு ஆபாசப் படங்களின் இணையப் பக்கங்களை அனுப்புவது, மாணவிகளின் தோற்றம் குறித்து ஆபாசமாகப் பேசுவது, பாலியல் ஜோக்குகளை உதிர்ப்பது, மாணவிகளைத் திரைப்படங்களுக்கு அழைப்பது, பின்னிரவில் மாணவிகளுக்கு போன் செய்வது, தேவையில்லாமல் தொடுவது, துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெற்றுடம்புடன் ஆன்லைன் வகுப்புகளில் தோன்றுவது என ராஜாகோபாலன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் திகைக்கச் செய்கின்றன. இதில் பல குற்றச்சாட்டுகள் 19 ஆண்டுகள் முன்பு வரை நீள்கின்றன. ராஜகோபாலன் சுமார் 20 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜகோபாலனின் இந்த நடத்தை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்கள் ஏற்கெனவே பல முறை குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை. இப்போது மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி இப்பிரச்னையை பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.
ராஜகோபாலனை பிஎஸ்பிபி கே.கே.நகர் பள்ளியிலிருந்து உடனடியாக இடைநீக்க செய்யவேண்டும். அவர் மீது விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடியும் வரை பள்ளி சார்ந்த எந்தக் கல்விச் செயல்பாடுகளிலும் அவர் ஈடுபடக் கூடாது. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பிஎஸ்பிபி குழும பள்ளிகளின் இயக்குநர் ஷீலா ராஜேந்திராவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இப்பிரச்னை பொதுவெளியில் கவனத்துக்கு வந்திருப்பதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து, ராஜகோபாலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.