Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுமதுரை-தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் - கொரோனா விதிமீறல் - விசாரணைக்கு உத்தரவு

மதுரை-தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் – கொரோனா விதிமீறல் – விசாரணைக்கு உத்தரவு

கொரோனா பேரிடர் கால கட்டுப்பாட்டை மீறி மதுரையை சேர்ந்த ஜோடிக்கு விமானத்தில் பறந்தபடி திருமணம் நடந்த சம்பவம் நேற்று வைரலான நிலையில், இந்த சம்பவத்தை விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாப் பேரிடரின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கும், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் திருமணத்துக்காக வெளியூர் செல்வதற்கும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தளர்வுடன் கூடிய ஊரடங்கு இருந்தபோது குறிப்பிட்ட நேரத்தில் எளிமையாக திருமணங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில் மே 24 முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கபட்டதால், கடந்த 23-ம் தேதி முழு நாளும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

அந்த ஒரு நாளில் ஏகப்பட்ட திருமணங்கள் தமிழகத்தில் எளிமையாக நடந்து முடிந்தன. இந்த நிலையில் மதுரையில் நடந்த ஒரு திருமணம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த ராகேஷ்-தீக்‌ஷனா ஜோடியின் திருமணத்தை அனைவரும் கவனிக்கும்படி நடத்த நினைத்த இரண்டு குடும்பத்தினரும், ஏஜென்சி மூலம் தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் உறவினர்கள் 130 பேரை அழைத்துச் சென்று, விமானம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேலே பறந்தபோது திருமணத்தை நடத்தியுள்ளனர். புரோகிதரையும் அழைத்து சென்றுள்ளனர். இதற்கு பல லட்சத்தை இருவீட்டாரும் செலவழித்துள்ளனர்.

இந்த திருமண நிகழ்வை திருமண வீட்டார் பெருமையாக சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். ஆனால், இந்த திருமண நிகழ்ச்சி, கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கும் விமான போக்குவரத்து இயக்ககத்துக்கும் புகார் சென்றுள்ளது.

மதுரையிலுள்ள ஒரு அரங்கில் திருமண நிகழச்சியை நடத்தியவர்கள், எதற்காக மீண்டும் விமானத்தில் திருமணத்தை நடத்தினார்கள் என்றும், விமானத்தை வாடகைக்கு எடுப்பது நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும், கொரோனா விதிகளை மதிக்காமல் 130 நபர்களை எப்படி விமானத்துக்குள் அனுமதித்தார்கள் என்றும், விமானத்தில் பயணித்தவர்கள் முகக்கவசம் அணியாததை விமான ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்ககம், ஸ்பைஸ் ஜெட் விமான நிராவகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. அன்று பணியாற்றிய ஊழியர்கள் மீது விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா விதிகளை மீறி கூட்டம் சேர்த்த திருமண வீட்டார் மீது மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments