ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை நினைத்துப் பயப்படுவதாக நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும் அங்கு ஆட்சியமைப்பதற்கான பணிகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள், குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாய், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்தபோது கிட்டத்தட்ட அனைத்துப் பெண் குழந்தைகளையும் பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து, விதிமுறைகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கினர். தற்போது அங்கு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
பல பெண்களைப்போலவே, ஆப்கானிஸ்தான் சகோதரிகளுக்காக நானும் பயப்படுகிறேன். கடந்த இரண்டு தசாப்தங்களில், கோடிக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி பயின்றனர். ஆனால், இப்போது அவர்களது எதிர்காலம் ஆபத்தாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் என்ன தவறு நடந்தது என்று விவாதிப்பது இருக்கட்டும். ஆனால், இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளின் குரல்களை நாம் கேட்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பு, கல்வி, சுதந்திரம் என எதிர்கால வாக்குறுதிகள் எல்லாம் கேள்விக்குறியாகி உள்ளன. நாம் அவர்களை தொடர்ந்து தோல்வியடையச் செய்ய முடியாது.
பெண்களை மதிப்போம், பெண்களுக்கு உரிமைகளை வழங்குவோம் என்று தலிபான்கள் உறுதி அளித்திருந்தாலும் அவர்கள், பெண்களின் உரிமைகளை வன்முறை மூலமாக நசுக்கிய வரலாறு இருக்கிறது. அந்தவகையில், ஆப்கானிஸ்தான் பெண்களின் தற்போதைய அச்சம் உண்மையானது. ஏற்கெனவே, பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவிகளும், அலுவலகங்களிலிருந்து பெண் ஊழியர்களும் விரட்டியடிக்கப்படும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா, 15 வயதாக இருந்தபோது பாகிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் அவரது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் படுகாயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார். தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக செயலாற்றி வரும் மலாலாவுக்கு 2014 ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.