தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கூடுதலாக 1.30 மணி நேரம், அதாவது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டுடனேயே நிறைவடைந்தது. அப்போது மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது. இதனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பிய பல கோடி நிதி, உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் திரும்பியும் அனுப்பப்பட்டன.
உள்ளாட்சி பணிகளை மேற்கொள்ள முடியாததால் பல்வேறு சிரமங்களையும் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ளனர். இதற்குப் பதிலாகச் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அது பெரியளவில் பயன் தருவதாக இல்லை. மேலும், தமிழ்நாட்டில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தின் கண்டிப்பிற்குப் பின்னரே கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போதும்கூட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டன. விடுபட்ட பகுதிகளுக்கு விரைவாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை 1.5 மணி நேரம் நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக உள்ளாட்சித் தேர்தல் காலை 7 முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நடைபெறும் நிலையில், தற்போது வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சூழல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வருவோர், கொரோனா அறிகுறி உடையவர்கள், உடல் வெப்பநிலை 98.4 -க்கு அதிகமாக உள்ளவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய ஏதுவாக வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் விடுபட்ட அனைத்து பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.