உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் கேரி என்ற ஊரில் போராடி வரும் விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் காரை ஏற்றி படுகொலை செய்து காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்டது நாட்டையே உலுக்கி வருகிறது.
இந்த இரக்கமற்ற செயலால் லவ்பிரீத் சிங் (20) தல்ஜித் சிங் ( 35) நஜ்சத்தார் சிங் (60) குருவிந்தர் சிங் (19) ஆகிய விவசாயிகள் மரணமடைந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதுடன் பலர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பத்து மாதங்களாக போராடி வருகின்றனர்.
கரிஃப் பருவ அறுவடையைத் தொடர்ந்து அக்டோபர் முதல் தேதியில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என வழக்கமாக வெளியிடப்படும் உத்தரவில், நடப்பாண்டில் 11 ஆம் தேதியில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்து, விவசாயிகளை ஆத்திரமூட்டியது. இதனால் அரியாணா மாநிலம் கர்னாலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அரசு பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர், கேரி என்ற ஊருக்கு ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா வருவதற்காக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இந்த தளத்தில் அமர்ந்து அமைச்சர் வருகைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். போராடி வரும் விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் தனது காரை ஏற்றி படுகொலை செய்துள்ளார்.
இந்த படுகொலைக்கு காரணமான அஸிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.