சென்னை
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம் 2019 ஆகஸ்டில் முடிந்தது.
அதற்கு முன், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி இருக்க வேண்டும். ஒப்பந்த பேச்சு முடிந்திருந்தால், ஊழியர்களுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஒப்பந்த பேச்சு நடத்தப்படவில்லை. இடைக்கால நிவாரணமாக, 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சி அமைத்தது. ஆறு மாதங்களாகியும் ஊதிய ஒப்பந்த பேச்சை துவங்காததால், தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டத்தை துவக்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு நீங்கி, பஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அதிகாரிகள் குழு இந்த நேரத்தில், ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்தினால் பிரச்னையாகும் என்பதால், ஊதிய ஒப்பந்த பேச்சை துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தொழிலாளர் துறை கமிஷனர், போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் பணி துவங்கி உள்ளது. விரைவில், ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.