Friday, December 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்புத்தாண்டு கொண்டாட்டம் - கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - தமிழ்நாடு முதலமைச்சர்.

புத்தாண்டு கொண்டாட்டம் – கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – தமிழ்நாடு முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் ககொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவில், “தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 31/12/2021 மற்றும் 01/01/2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், பின்வரும் செயல்பாடுகள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டியிருந்த ஊரடங்கின் காரணமாக, பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், 03/01/2021 முதல் அனைத்து உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் (6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை மட்டும்) அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தற்போது அண்டை மாநிலங்களில் உருமாறிய கொரோனா, “ஓமிக்ரான்” வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதன் காரணமாக, நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக, கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், பொதுமக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து நிறுவனங்களும் கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments