Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சென்னையில் 3ம் முறை மாடு பிடிபட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படாது - சென்னை மாநகராட்சி

சென்னையில் 3ம் முறை மாடு பிடிபட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படாது – சென்னை மாநகராட்சி

சென்னையில் 3ம் முறை மாடு பிடிபட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் சுற்றிதிரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550/- விதிக்கப்படுகிறது.

அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டு தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண

பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க சுகாதார ஆய்வாளர், மண்டல நல அலுவலர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்து கொள்ள வேண்டும். மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும்.

இதையும் படிக்க-ஆளுநர் ஆர்.என்.ரவி – அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம், கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குட்பட்ட அங்காடிகளுக்கு வந்து செல்லும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அதிகளவிலான மாடுகள் சுற்றிதிரிவதாக புகார் பெறப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் இன்று (17.12.2021) கோடம்பாக்கம் மண்டலம் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பிற மண்டலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 4 வாகனங்களைக் கொண்டு மாடுகளை பிடிக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் இன்று 16 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாடுகள் மாநகராட்சியின் புதுப்பேட்டையில் உள்ள தொழுவத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஆகவே, மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments