தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்கு 38வது வார்டில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் மறைத்து வைத்திருந்த 38 செல்போன்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கரூர் மாநகராட்சி 38வது வார்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கரூர் 38வது வார்டு பகுதியில் மாரியாயி என்ற பெண்மணி, தனது பைக்குள் 11 கீபேட் செல்போன்களை வைத்திருந்தார். அந்த பையில் அதிமுக சார்பில் 38வது வார்டில் போட்டியிடும் சரவணன் என்பவரது பெயர் பொறிக்கப்பட்ட டோக்கன்களும் இருந்தன. சரவணன், முன்னாள் அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, போலீசார், அந்த பெண்மணி மீது சந்தேகமடைந்து, அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது, அந்த செல்போன்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக வினர் வைத்திருந்தது என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த பெண் அளித்த தகவலின்படி, போலீசார் அதே வார்டில் ஒரு வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் 27 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து 38 செல்போன்களையும், அதிமுக வேட்பாளர் சரவணனின் பெயர் பொறிக்கப்பட்ட ஏராளமான டோக்கன்களையும் போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.