நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பச்சையாற்றில் சுமார் 25அடி நீள மலைப்பாம்பு உலவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். ஆற்றங்கரையோரம் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி அந்த பாம்பு வசித்து வருவதால் அப்பகுதியினர் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாணாங்குளம் செல்லும் சாலையில் அந்த மலைப்பாம்பு சாவகாசமாக கடந்து செல்வதை அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பச்சை ஆற்றில் இருக்கும் புதரில் மறைந்திருக்கும் மலைப் பாம்பால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து உள்ளதால் வனத்துறையினர் அதனைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.