Friday, March 24, 2023
Home தமிழகம் அண்ணாமலைக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

அண்ணாமலைக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

பி.ஜே.பி மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார் .
இந்த வழக்கை தாமதமாக NIAவிற்கு அனுப்பியதாக கூறுகிறார் .

இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு ( UAPA) சேர்க்கப்பட்டலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப் பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம். ஆனால், நடைமுறையில் , ஒன்றிய அரசு , தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை, வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய, புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் , சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன் வந்து NIA விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம்.

ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை கார் வெடிப்பு நிகழ்வை NIA விசாரிக்க பரிந்துரை செய்தார்.

இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துத்துக்கூட வழக்குகள் NIA இடம் ஒப்படைக்கப்பட்டன, அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே NIA விடம் ஒப்படைக்கப்பட்டன.

தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடில்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது.

ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார்.
குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை.

18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21 ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருத்தால் தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து , வீடுகளை சோதனையிட்டு , வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும்.
எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு காவல்துறை,
தலைமையகம்,
சென்னை-4

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments