ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை அரசு இரும்பு காரம் கொண்டு ஒடுக்கியது. இதில் 500-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இதனிடையே அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 18 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஈரானை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை தாரனே அலிதூஸ்டி போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தும் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் ஈரானின் மரண தண்டனைக்கு எதிராக பேசும்படி சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டி நடிகை தாரனே அலிதூஸ்டியை ஈரான் போலீசார் நேற்று கைது செய்தனர். 38 வயதான தாரனே அலிதூஸ்டி ஈரானின் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவர் என்பதும், இவர் நடித்த ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம் கடந்த 2016-ம் ஆண்டு சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற பின்னர் உலகளவில் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.