Thursday, December 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ஆதாரபூர்வமாக நிரூபித்தால் மட்டுமே, லஞ்ச வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கு வாரிசுரிமை - சென்னை உயர்நீதிமன்றம்

ஆதாரபூர்வமாக நிரூபித்தால் மட்டுமே, லஞ்ச வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கு வாரிசுரிமை – சென்னை உயர்நீதிமன்றம்

லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்துவிட்டால், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மீதான உரிமையை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவற்றிற்கு அவரது வாரிசுகள் உரிமை கோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணிபுரிந்த தன்ராஜ், அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக 40ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்புத் துறை டிசம்பர் 2020ல் கைது செய்தது.

அதனடிப்படையில், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 லட்சத்து 66ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளுடன், 56 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தன்ராஜ் மீதான வழக்கின் விசாரணை திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் மரணமடைந்த நிலையில், தன்ராஜிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், சொத்து ஆவணங்களை வாரிசுகளான தங்களிடம் திருப்பித்தரக் கோரி அவரது மனைவி அங்கயற்கண்ணி, மகன் ஹரிபிரதாப், மகள் ஹரிப்பிரியா ஆகியோர் திருவாரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கான வருவாய் ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், திருவாரூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், தன்ராஜ் மரணமடைந்ததை அடுத்து அவர் மீதான குற்றநடவடிக்கை கைவிடப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வாரிசுகளான தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த பணம் மருத்துவமனை கட்டுவதற்காக பலரிடம் வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக தன்ராஜ் மீதோ, குடும்பத்தினர் மீதோ வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதுடன், தனது அலுவலகத்தை தவறாக பயன்டுத்தி சொத்தை சேர்த்ததாக நிரூபிக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், பறிமுதல் செய்யப்பட்டவை சட்டவிரோத பணம் தான் என்றும், மனுதாரர் உயிரோடு இருக்கும்போது பணத்தை திருப்பி கேட்கவில்லை என்றும், மரணமடைந்த தன்ராஜோ, அவரது வாரிசுகளோ பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சமர்பிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், தன்ராஜ் இறந்துவிட்டதால், குற்றச்செயல் மறையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், குற்ற வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்தை திருப்பி கேட்பதை உரிமையாக கோர முடியாது என்றும், அந்த சொத்தின் மீதான உரிமையை ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் மட்டுமே, திரும்பி கேட்க முடியுமென தீர்ப்பளித்து, தன்ராஜ் குடும்பத்தினரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

- Advertisment -

Most Popular

Recent Comments