முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் – மாண்புமிகு அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் இருந்து – மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும் – ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.