Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது  வழக்கு

வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது  வழக்கு

வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகள் மீது நீலாங்கரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ வான கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர் தனது மனைவிவுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், ஆண்ட்ரோ தனது வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. அந்த வீடியோவில் அப்பெண், ஏஜெண்ட் மூலம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டுக்கு வேலைக்கு சென்றேன். வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களிலேயே என்னால் முடியாது என்றேன். அப்போது என்னை அடித்து உதைத்து எனது போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். முதலில் 6 மாதத்தில் அனுப்பி வைப்பதாகக் கூறினர். 

காலை 6 மணிக்கு வேலை ஆரம்பித்தால் நள்ளிரவைத் தாண்டியும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டுக்கு என்னை அனுப்பி வையுங்கள் என கூறி காலில் விழுந்து கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. எம்எல்ஏ மருமகள், நான் ஒரு வார்த்தை சொன்னால் உன் வீடே இல்லாமல் ஆக்கி விடுவார்கள். உன் நடத்தை சரியில்லை என வதந்தி பரப்பி விடுவேன் என மிரட்டினார். ஒரு சின்ன வேலை, பாத்திரம் சரியாக கழுவவில்லை என்றாலோ, துணியை சரியாக மடித்து வைக்கவில்லை என்றாலோ அவர்களுக்கு தோன்றும் வித விதமாகக் கொடுமைப்படுத்துவார்கள்.

மிளகாய் தூளை கரைத்து குடிக்க வைத்தனர். காரத்தால் டைல்ஸ் தரையில் படுத்து துடிப்பேன். அப்போது, தண்ணீர் கூட குடிக்க அனுமதிக்க மாட்டார்கள். 7 மாதம் வேலை செய்தும் எந்த சம்பளமும் கொடுக்கவில்லை எனக் கூறுவதோடு அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் கண்டன குரல் எழுப்பினர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம், குழந்தை பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments